Tuesday, May 09, 2006

குளிர்காலம்

பளீரென சிரிக்கும் வசந்த காலம்
போலிருக்கும் உன் பேச்சு.

இப்போதோ உறைந்து போன குளத்தின் மீது சிறுவர்
விட்டெறிந்த கற்கள் போல கனக்கிறது உன் மௌனம்.

எப்பொழுது பனி இளகும் என காத்திருக்கிறேன்.

தொலைந்து போன கடிதங்கள்



கரிசனத்துடன் எழுதும் அப்பாவின் கடிதம்

புத்தி சொல்லும் அண்ணனின் வார்த்தைகள்

ஆவலுடன் காத்திருக்கும் மனைவி

எப்போது வருவாய் எனும் மகனின் வினா

குடித்துவிட்டு எழுதும் நண்பனின் உளறல்

அவருக்கே புரியாத மாமனாரின் காக்காய் கிறுக்கல்

ஜிலேபி என்றழைக்கப்படும் கல்லூரித் தோழனின் பிழியல்

கல்லூரித் தோழியின் கிட்டத்தட்ட காதல் வரிகள்

தாத்தாவின் பாசக்குழைவு

பொங்கலுக்கு வந்து குவியும் வாழ்த்துக்கள்

தொலைபேசித் தூரத்தாலும் இணையத்தாலும்

இவை அனைத்தையும் தொலைத்த நாம்.

வேதாளம்

கல்லூரியில் மைதானத்தையே பார்க்காமல் நாற்பதில் மராத்தன் முடிக்கும் நண்பன்

மகனை உயர்நிலைப்பள்ளியில் விட்டு பரதம் பயிலும் தாய்

உலகமெல்லாம் சுற்றும்போதும் தினம் ஒரு கவிதை எழுதும் மேலாளர்

வருடத்துக்கு ஒரு புதுமொழி கற்கும் மென்போருள் நிபுணர்

குடியே முழுகினாலும் பங்குச்சந்தையை விடாக்கண்டர்

ஓய்வு பெற்றுவிட்டு விமானமோட்டப் பழகும் மாமா

பத்து மணிநேரம் குழந்தைகளை கவனித்துவிட்டு வந்து பந்துவராளியை பந்தாடும் மருத்துவர்

இருபதாம் தேதியைக் காட்டி மிரட்டும் இவ்வலைத்தளத் தலைவி

மகனுடன் முதுகலை தொழில் நிர்வாகம் படிக்கும் அன்னை

தொடக்கப்பள்ளி மகனுடன் கராத்தே துவங்கும் தந்தை

இவ்விக்கிரமங்களால் சற்றும் தளராமல் முருங்கையில்

சிவனே என்றிருக்கும் நான்!